தென்காசி அருகே போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ: 89 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

கடும் வெயில், பலத்த காற்று காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
தென்காசி அருகே போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ:
89 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அங்குள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அங்கு நிறைய மூங்கில் மரங்கள் உள்ளன. சுற்றுச்சுவரின் அருகே மூங்கில் மரங்களையொட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தனித்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று கடும் வெயில், பலத்த காற்று காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் மூங்கில் மரங்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தன. கீழே விழுந்த காய்ந்த மூங்கில் இலை குவியல்களில் தீ பரவிய நிலையில், அதனருகே அடுத்தடுத்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 89 மோட்டார் சைக்கிள்கள் மீது தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார். அங்கிருந்த வாளிகளில் தண்ணீரை பிடித்து வந்து தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே தகவலறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டதால் மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சுமார் 89 மோட்டார் சைக்கிள்கள் கருகி எலும்புக்கூடுகள் போன்று காட்சியளித்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com