

சென்னை,
சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இணையவழி எம்.டெக். மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன. 2026 மே 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் https://code.iitm.ac.in/webmtech என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணிபுரிவோர், புதிய பட்டதாரிகள் ஆகியோர் நாட்டின் முன்னணிக் கல்வி நிறுவனத்தில் முதுகலைப் படிப்பு படிக்க சிறந்த வாய்ப்பை இந்த பாடத்திட்டங்கள் வழங்குகின்றன. நுழைவுத் தேர்வுகள் 2026 ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 2026 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கும். எம்.டெக் படிப்புகளைப் பொறுத்தவரை, தொடர்புடைய கல்வித் தகுதி மற்றும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். பட்டயப் படிப்புகளுக்கு, புதியவர்கள் உட்பட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தொடர்புடைய பாடப்பின்னணி கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்படிப்புகளின் சிறப்பம்சங்களைப் பற்றி சென்னை ஐஐடி டீன் (பாடத்திட்டங்கள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், பாடத்திட்டங்கள் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மாணவர்கள் பணிபுரிந்து கொண்டே பயிலலாம் என்றும், வகுப்புகள் நேரலையாக ஆன்லைன் மூலம் மாலை நேரம் அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டார். இப்பாடத்திட்டங்கள் பல்வேறு நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முதுகலை பட்டயப் படிப்பை எடுத்துப் படிக்கவோ, எம்.டெக் முதுகலைப் பட்டத்திற்கு படிப்பைத் தொடரவோ செய்யலாம். பணிபுரிவோர் நேரடியாக எம்.டெக்கில் சேர்ந்து பணிகளைத் தொடரலாம்.
இப்பாடத்திட்டங்கள் விண்வெளிப் பொறியியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் பாதுகாப்பு. கணினி அறிவியல், மின்சாரப் பொறியியல், உற்பத்திப் பகுப்பாய்வு, இயந்திரப் பொறியியல், மின்சார வாகனத் தொழில்நுட்பம், செயல்முறைப் பாதுகாப்பு போன்ற எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.