

சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில், சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு எம்.பி துரை வைகோ பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் மதிமுக கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் மதிமுக கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன் என்றார்.