ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை

ஊடக நிறுவனங்களுக்கு வீடியோக்கள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.
ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை
Published on: 

சென்னை,

ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அப்பாவி சிறுமிகள்

அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக வீரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணிக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2003-ம் ஆண்டில் இருந்து சுமார் 23 ஆண்டுகள் வீரமணியின் பாலியல் விளையாட்டுகள் தொடர்ந்து நடந்துள்ளது. வீரமணி தொடர்பான ஆபாச வீடி யோக்கள் அவரது உதவியாளராக இருந்த கணேசன் என்பவரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சோதனை

மேலும், இந்த வழக்கில் பெரம்பூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரையும், வீரமணியின் தம்பி ஒருவரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் பிரகாஷ் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் தொடர்பாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் வழங்கிய பென் டிரைவ் மற்றும் கடிதத்தை ஆதாரமாக வைத்து குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகார் மனு அப்போதைய சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த புகார் மீது அதே ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போக்சோ சட்டப் பிரிவு களின் கீழ் சென்னை விபசார தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனால், 'வீடியோவில் உள்ள நபரை பற்றிய தகவல்களை கண்டறிய முடியவில்லை' எனக் கூறி கடந்த பிப்ரவரி 26-ந்தேதி போக்சோ சிறப்பு கோர்ட்டில் விபசார தடுப்புப்பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட தோற்றத்தில் உள்ள நபரை பற்றி ரகசியமாக புலனாய்வு செய்து அவரை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தகவல்கள் எதுவும் கண்டறிய முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி தகவல்கள்

இதனை ஏற்க மறுத்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, 'வீடியோ இருந்தும் ஏன் கண்டறிய முடியவில்லை?' என கேள்வியெழுப்பி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான், மீண்டும் இந்த வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கு சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் வழக்கில் தொடர்புடைய பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த விசாரணை வளையத்துக்குள் அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் மீது நடவடிக்கை

இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையை சேர்ந்த துளிர் அறக்கட்டளை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் போக்சோ சட்ட விதிகளையும், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளையும் மீறி, ஊடகங்கள் இந்த வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு விவாதங்களை நடத்தி வருவதாகவும், அந்த ஊடக நிறுவனங்களுக்கு வீடியோக்கள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், இந்த வழக்கை அரசு தீவிரமாக கருதி விசாரித்து வருவதாகவும், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்ட 4 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வீடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வீடியோக்கள் வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஊடக நிறுவனங்கள் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

வீடியோக்களை வெளியிட தடை

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது, காவல்துறையின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ததால், பயங்கரவாதிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றி செயல்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல என தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக விவாதங்கள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய மாநில அரசுகள், காவல்துறை, வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com