

மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு அச்சிடப்பட்ட பத்திரிகையில் மீனாட்சியம்மன் கோவில் அலங்காவலர் குழுவினரின் பெயர் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும், திருக்கோவிலின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பாக மனுதாரர் மற்றும் பதவியில் இருக்கும் பிற அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றுவதில் சட்ட விரோதமான தலையீடுகளை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மத நிகழ்வுகளில் அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அறங்காவலர் குழுவின் குழுவினரின் பெயரே போடவில்லை. அவர்களின் பெயர் இடம் பெறாதது மிகப்பெரிய தவறு’ என நீதிபதி தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும், கும்பாபிஷேக விழா முடிந்தவுடன் கோவிலில் வைக்கக்கூடிய கல்வெட்டில் அறங்காவலர் குழு பெயர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதி பிறப்பித்துள்ளார். அதோடு, ‘கோவில் என்பது மக்கள் அமைதி தேடி வரக்கூடிய இடம், அதில் இந்து சமய அறநிலைய துறை அரசியல் செய்தது ஏற்கத்தக்கது அல்ல” என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.