

ஆதரவு கட்சிகள்
த.வெ.க. தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்படுகிறது. இதேபோல கூட்டணிக்கான தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மேலும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டு அதற்கென ஆட்களும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.