

சென்னை,
மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்கக்கூடாது என்றும், காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவின் விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு நேற்று நான் எழுதியுள்ள விரிவான கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:-
மைசூருவில் நவம்பர் 13 அன்று பிரதமர் முன்னிலையிலேயே, “மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது; மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்” என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பேசியதும், அதற்குப் பிரதமர் மௌனம் சாதித்ததும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு (2007) மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி (2018), இயல்பான ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 404.25 டி.எம்.சி. நீரும், அதில் கர்நாடகா மாதாந்திர அட்டவணைப்படி ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரையும் திறந்துவிட வேண்டும். கீழ்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் முழுமையான ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலம் எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்பது சட்டப்பூர்வமான விதியாகும்.
ஏற்கனவே ஜூலை 27, 2026 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர், “கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை” எனப் பதிலளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 28 அன்று நான் மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தேன்.
கடந்த 5 மாதங்களில் (ஜூலை முதல் நவம்பர் 2026 வரை) மட்டும் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) பிறப்பித்த குறைந்தது 6 உத்தரவுகளைக் கர்நாடகா தொடர்ந்து மீறியுள்ளது. 3,500 கன அடி, 12,000 கன அடி, 9,000 கன அடி, 6,000 கன அடி, 4,000 கன அடி எனத் திறந்துவிடச் சொன்ன உத்தரவுகளைப் புறக்கணித்ததோடு, நவம்பர் 4 வரை வழங்க வேண்டிய நீரில் 16.895 டி.எம்.சி. தண்ணீரை நிலுவையில் வைத்துள்ளது.
கர்நாடகாவின் இந்த தொடர் மீறல்களால் டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீருக்கும் காவிரியே ஜீவாதாரம்.
இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணையை விடப் பெரியதாக, ரூ.9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு இயல்பாக வரக்கூடிய சுமார் 80 டி.எம்.சி. உபரி மற்றும் மழை நீர் தடுக்கப்பட்டு, காவிரி டெல்டா வறண்ட பாலைவனமாக மாறிவிடும்.
எனவே, பிரதமரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்:-
1. மைசூரு பேச்சுக்குப் பிறகு எழுந்துள்ள குழப்பங்களைப் போக்கும் வகையில், மத்திய அரசு நடுநிலையோடு செயல்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக நிலைநாட்டும் என்றும் பிரதமர் பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
2. தமிழ்நாடு அரசின் முழுமையான ஒப்புதல் இல்லாமலும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவுக்கு வராமலும், மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித சுற்றுச்சூழல், தொழில்நுட்ப அல்லது இறுதி ஒப்புதலையும் வழங்கக் கூடாது என மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையத்திற்கு (CWC) உத்தரவிட வேண்டும்.
3. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி மாதாந்திர நீர் பங்கீட்டைக் கர்நாடகா முறையாகப் பின்பற்றி, நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் ஒழுங்காற்றுக் குழு (CWRC) மூலம் உறுதி செய்ய வேண்டும்.
காவிரியின் ஒவ்வொரு துளியும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது அரசியலமைப்பு கடமையிலிருந்து தவறாமல், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.