

சென்னை,
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது அப்பட்டமான பாரபட்சமான நடவடிக்கையாகும். இதன்மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உரையாற்றிய முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், எனவே மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இரு மாநிலம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் பேசியிருப்பது தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமானது. ஐம்பது ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பெற்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற்ற தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கபினி அணையில் இருந்து 60 டிஎம்சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 52 டிஎம்சி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் அளவை நிலையம் அமைந்துள்ள பிலின்குண்டுலு வரை 200 கிலோமீட்டரில் மழை நீரின் மூலம் கர்நாடகாவின் கட்டுப்பாடற்ற நீர் பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கிற 80 டிஎம்சி ஆகியவற்றை சேர்த்தால் தான் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி நீர் கிடைக்கும். ஆனால் கர்நாடக அரசு எப்பொழுதுமே நமக்கு குறிப்பிட்ட காலத்தில் தர வேண்டிய நீரை தருவதில்லை. பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு தான் காவிரியில் நீரை பெற்று வருகிறோம். இந்நிலையில் கர்நாடக, தமிழ்நாடு எல்லையில் பிலிகுண்டுலுவுக்கு மேலே 4 கிலோமீட்டர் தொலைவில் 67.15 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி வருகிறது.
மேகதாது அணை கட்டப்படுமேயானால் மழை நீரின் மூலம் கட்டுப்பாடற்ற நீர் பிடிப்பு பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 80 டிஎம்சி நீரையும் கிடைக்காமல் போவதற்கு வழி ஏற்பட்டு விடும். இது காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக மாற்றுவதற்கு வழி வகுக்கும். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டி.கே. சிவகுமார் கூறுவது அடிப்படையற்ற வாதமாகும்.
எனவே காவிரியில் எந்தவிதமான கட்டுமானமோ, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை தடுக்கின்ற எந்த முயற்சியையும் கர்நாடக அரசு காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேற்கொள்ளக்கூடாது என்று நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிற போது மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயலாகும். இதை எந்த வகையிலும் தமிழ்நாடு அனுமதிக்காது.
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் பேசியிருப்பது இப்பிரச்சனையில் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக நடக்கிறது என்ற குற்றச்சாட்டை கூற விரும்புகிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது அப்பட்டமான பாரபட்சமான நடவடிக்கையாகும். இதன்மூலம் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. எனவே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு எடுக்கிற முயற்சிகளை மிகுந்த விழிப்புணர்வோடு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.