

சென்னை,
தாயுமானவர் திட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவாக ரேஷன் பொருள் விநியோகித்த பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் 21 லட்சத்து 70 ஆயிரம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
ஆனால், தாயுமானவர் திட்டத்தில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகளுக்கு தேடிச்சென்று பொருட்கள் வழங்க செல்லும்போது, சிலர் இருப்பதில்லை. போன் மூலம் தொடர்புகொண்டால், மகன் அல்லது மகள் வீட்டில் இருப்பதாகவும், அல்லது ஆஸ்பத்திரிக்கு சென்றிருப்பதாகவும் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், குறுகிய சாலைப்பகுதியில் இருப்பவர்களை தேடிச்சென்று பொருட்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, கைரேகை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். கருவியும் 'சார்ஜ்' இல்லாமல் 'ஆப்' ஆகிவிடுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
அதாவது, தாயுமானவர் திட்டத்தின் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவாக பொருட்கள் விநியோகித்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தும் போது இருக்கும் நடைமுறைச் சிக்கலால் கடும் அதிருப்தியில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு இவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.