வேளச்சேரி,பள்ளிக்கரணையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்.! - ஆராய்ச்சி நிறுவனம்

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகியவை வடிகாலாக உள்ளன.
சென்னை,
உவகை ஆராய்ச்சி நிறுவனம்(Uvagai Research Foundation)சார்பில் முனைவர் விதுபாலா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
2015 ஆம் ஆண்டு வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பலத்த மழை பெய்யும் போது அந்தப் பகுதியில் பாதிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதற்கு ஒரு சான்று தான், பலத்த மழை குறித்து வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு வெளியானவுடன்,அங்கு வசிப்போர் தங்கள் நான்கு சக்கர வாகனத்தை பாலத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள்.
அங்கு ஏற்படும் வெள்ளைச் சேதத்தை தடுக்குமுகமாகவும் கடலுக்கு செல்லும் தண்ணீரை பயன்படுத்தும் வகையிலுமான நோக்குடன் விரிவான ஆய்வை மேற்கொண்டு முதல் கட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். இது அரசின் திட்டங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் அரசின் பார்வைக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
இந்த ஆய்வுக்கு , கிராம வருவாய் ஆவணங்கள் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட நீர்வளத்துறை ஆவணங்கள், இஸ்ரோ செயற்கைக்கோள் தரவுகள் - (Bhuvan) வலைத்தளம் மற்றும் கூகுள் படங்கள் ஆகியவை உதவிகரமாக இருந்தன. நீர்நிலைகள் அருகில் வசிக்கும் தன்னார்வலர்கள் உதவி செய்தனர்.
சென்னையின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு கொசஸ் தலை, கூவம், அடையாறு ஆகியவை வடிகாலாக உள்ளன. அந்த நிலை கிண்டிக்கு தெற்கே இல்லை. கிண்டி-பரங்கிமலை- வண்டலூர்- முட்டுக்காடு இந்தப் பகுதிகளை சுற்று வட்டமாகக்கொண்ட சுமார் 306 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 77 கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள 400 க்கு மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வந்து அங்கிருந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங் காங் கால்வாய் வழியாக முட்டுக்காடு காயலை(Back water )அடைந்து கடலுக்குச் செல்கிறது.
எங்கள் ஆய்வின் படி, இங்குள்ள 119 ஏரிகள்,288 குளங்களை தேவையான அளவு ஆழப்படுத்தி, முறைப்படி பராமரித்து, நீர் இணைப்புகளை முறைப்படுத்தினால் பெருமழை பெய்யும் காலங்களில் கூடுதலாக 35 சதவீத தண்ணீரை அங்கேயே சேமிக்க முடியும்.
"சென்னை மாநகரின் நுரையீரல்" என்று கருதப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒரு காலத்தில் 6000 ஹெக்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் காரணமாக இதன் அளவு 694 ஹெக்டராக தற்போது சுருங்கி விட்டது.இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய தகவலாகும்.
வருவாய்த்துறை ஆவணங்களையும் கூகுள் எர்த் படங்களின் மூலம் தற்போதைய நிலையையும் ஆய்வு செய்யும்போது மொத்தம் 165 நீர் நிலைகள் மொத்தமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டது. உயிர்ப்புடன் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத சமூகக் கடமையாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக பள்ளிக்கரணைக்கு வரும் அதிகப்படியான மழை வெள்ளம் கடலுக்கு எளிதாக வெளியேற, பக்கிங் கால்வாயில் உள்ள மணல்திட்டை அகற்றி, ஒக்கியம் மடுவிலிருந்து முட்டுக்காடு வரை அதை 100 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செய்வது போல , பயன்பாட்டுக்குப் பிறகு வெளியேற்றப்படும் ஏராளமான அளவுள்ள கழிவு நீரை முறையான நீர் மேலாண்மை மூலம் சுத்திகரித்து மறுபடியும் பயன்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் நல்ல நீர் பயன்பாடு கணிசமான அளவு குறையும். இதற்கான ஆலையை ஒரே இடத்தில் அமைக்காமல் ஆங்காங்கே அரசு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிக்கரணை நீர் பிடிப்பு நிலத்தில் 72 சதவீதம் கடல் மட்டத்திலிருந்து உயரத்திலும் 28 சதவீதநிலம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டருக்கு குறைவாகவும் உள்ளது. செம்மஞ்சேரி பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு நகரம் நீர் தேங்கும் தாழ்வான பகுதியில் வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தை வேறு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும்.
திட்டங்கள் தீட்ட நம்பகரமான தரவுகள் மிகவும் முக்கியம். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அரசு இதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய படிப்புக்கும்(project Reports) உதவும், அரசுக்கும் தரவுகள் கிடைக்கும்.
இன்றைக்கு திட்டங்கள் அனைத்தும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் போடப்படுகின்றன. அரசுத்துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான புள்ளி விவரங்களை வைத்திருக்கின்றன. இந்த நிலையை மாற்றி சீரான புள்ளி விவரங்கள் அரசிடம் இருக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வின் போது அறிய நேரிட்டது. அரசின் திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட இந்த விழிப்புணர்வு உதவும்.!
இவ்வாறு அவர் கூறினார்.