மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில்: யுனெஸ்கோ அந்தஸ்தின் 21-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நீலகிரி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டதன் 21-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. ​
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில்: யுனெஸ்கோ அந்தஸ்தின் 21-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
Published on

கோயம்புத்தூர்,

உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலுக்கு (NMR) யுனெஸ்கோ (UNESCO) அந்தஸ்து வழங்கப்பட்டதன் 21-ம் ஆண்டு தொடக்க விழா இன்று மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ​இவ்விழாவை முன்னிட்டு, இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த மலை ரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு, ரெயில்வே அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

​மலை ரெயிலின் வரலாற்றுச் சிறப்புகள், அதன் தனித்துவமான பல்சக்கர அமைப்பு (Rack and Pinion System) மற்றும் இந்த பாரம்பரியச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

​விழாவிற்கு நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் திருமலையான் தலைமை தாங்கினார். ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசாரின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பயணிகளின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காலை 7:10 மணிக்கு மலை ரெயில் ஊட்டி நோக்கித் தன் பாரம்பரியப் பயணத்தைத் தொடங்கியது.

​யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து என்றால் என்ன?

​யுனெஸ்கோ அந்தஸ்து (World Heritage Site): உலக அளவில் மனிதகுலத்தால் உருவாக்கப்பட்ட மிக அரிய கட்டடக்கலை, பொறியியல் சாதனைகள் அல்லது இயற்கையான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில், ஐநா சபையின் அங்கமான யுனெஸ்கோ வழங்கும் உயரிய அங்கீகாரமே 'உலக பாரம்பரிய அந்தஸ்து' ஆகும்.

​கிடைக்கும் பயன்கள்

சர்வதேசப் பாதுகாப்பு: இந்த அந்தஸ்து பெற்ற பின், குறிப்பிட்ட தளம் சர்வதேசச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படும்.

​சுற்றுலா மேம்பாடு: உலக சுற்றுலா வரைபடத்தில் இந்த இடம் முக்கியத்துவம் பெறுவதால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும்.

நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம்: இந்த கட்டமைப்பைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் சர்வதேச அளவிலான நிதியுதவிகளும், நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளும் கிடைக்கப் பெறும்.

யாருக்கெல்லாம் பெருமை?

​இந்தியாவில் டார்ஜிலிங், கால்கா-சிம்லா ஆகிய மலை ரெயில்களுடன் இணைந்து நீலகிரி மலை ரெயிலும் "இந்தியாவின் மலை ரெயில்கள்" என்ற கூட்டுப் பெயரின் கீழ் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை பல தரப்பினருக்குப் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது.

உலக அளவில் இந்தியாவின் பொறியியல் வியக்கத்தக்க தொழில்நுட்பத்திற்கு கிடைத்த சர்வதேச மகுடம் இது. நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் சுற்றுலாத்துறையையும் உலக அரங்கில் உயர்த்திய பெருமை உள்ளூர் மக்களையே சாரும்.

செங்குத்தான மலைப்பாதையில், அடர்ந்த காடுகளையும், இக்கட்டான நிலப்பரப்பையும் கடந்து இந்த ரெயில் பாதையை அமைத்த அன்றைய பொறியாளர்களுக்கும், இன்றுவரை இதனைத் தொய்வின்றி இயக்கி வரும் தற்போதைய ரெயில்வே தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த ஆகச்சிறந்த கவுரவம் இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com