குறுகிய காலத்தில் 5 முறை நிரம்பிய மேட்டூர் அணை


குறுகிய காலத்தில் 5 முறை நிரம்பிய மேட்டூர் அணை
x

மேட்டூர் அணை பார்ப்பதற்கு கடல் போல காட்சியளிப்பதால் அதனை ரசிக்க சுற்றுலா பயணிகளும் நிறைய பேர் வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை, தென் மேற்கு பருவமழை இரண்டுமே பயன் கொடுக்கும் என்றாலும் டெல்டா மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகியவற்றுக்கு கைகொடுக்கும் மழை தென்மேற்கு பருவமழை தான். இந்த மாவட்டங்களில் நடக்கும் விவசாயம் தான் தமிழ்நாட்டின் உணவு பஞ்சத்தை தீர்க்கிறது. அதனால்தான் டெல்டா மாவட்டங்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் ஜீவ நதி காவிரிதான். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காவிரியில் ஓடுகிறது. தென்மேற்கு பருவமழையால்தான் மேட்டூர் அணை நிரம்புகிறது என்றாலும், இந்த தண்ணீர் கர்நாடகத்தில் பெய்யும் மழையால் கிடைக்கும் உபரி நீர் ஆகும்.

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் அதிகம் பெய்வதில்லையென்றாலும், கர்நாடகத்தில் பெய்வதால் தமிழ்நாட்டு விவசாயத்துக்கு மேட்டூருக்கு பாய்வதன் மூலம் துணையாக இருக்கிறது. எனவேதான் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தால் அது தமிழக விவசாயிகளுக்கு பெரும் பூரிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் தங்கள் முழுகொள்ளளவை எட்டி நிரம்புகின்றன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையும் நிரம்பிவிடுகிறது. இதனால் காவிரியில் தாராளமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு வழக்கம்போல மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறந்துவிடப்பட்டது. எனினும் மேட்டூர் அணையின் முழு நீர் மட்டமான 120 அடி ஜூன் மாதம் 29-ந்தேதிதான் எட்டியது. அணையில் இருந்து உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகளும் திறந்துவிடப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு பிறகு அணைக்கு தண்ணீர் வரத்து குறைவதும், கூடுவதுமாக இருந்தாலும் அடுத்தடுத்து ஜூலை மாதம் 5, 20, 25 மற்றும் கடந்த 20-ந்தேதி அதிகாலையில் என்று 5 முறை மேட்டூர் அணை நிரம்பி முழு அளவில் 120 அடியில் தண்ணீர் நிற்பதால் விவசாயிகளின் மனமும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. குறுகிய காலத்தில் 5 முறை நிரம்பி பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை பார்ப்பதற்கு கடல் போல காட்சியளிப்பதால் அதனை ரசிக்க சுற்றுலா பயணிகளும் நிறைய பேர் வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் வரை இருப்பதால் இன்னும் சில முறை நிரம்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆக டெல்டா விவசாயிகளுக்கு இது பெரும் பயனளிக்கும் ஆண்டு. இதனால்தான் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் பெரும் வெற்றி விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. வழக்கமாக சராசரி குறுவை நெல் சாகுபடி 4.4 லட்சம் ஏக்கரில்தான் இருக்கும். ஆனால் கடந்த 10-ந்தேதி நிலவரப்படி மட்டும் 6 லட்சத்து 9 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3.8 லட்சம் ஏக்கரில் மட்டும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும். நெல் மட்டுமல்ல மற்ற பயிர்களும் செழித்து வளர காவிரி தாய் மேட்டூர் அணை மூலமாக உதவிக்கரம் நீட்டி விட்டாள். ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று விவசாயிகள் ஆனந்த கூத்தாடலாம்.

1 More update

Next Story