

சென்னை,
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி, வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி, வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ராம்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் மண்டலம், வார்டு-98 அயனாவரம், யுனைடெட் இந்தியா நகர் 1ஆவது குறுக்குத் தெருவில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் தலா ஒரு கிராம் தங்க மோதிரத்தினை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஜீன் 22ஆம் தேதி முதல் பிறந்த 6790 குழந்தைகளில் இதுவரை 3823 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இதனை தொடர்ந்து, வார்டு-98க்குட்பட்ட அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணியின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.