

சென்னை,
2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை-ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2026-2027ஆம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவியர், கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 4 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடைபெறுகின்றன.
விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள, இதுவரை இல்லாத அளவிற்கு 26,38,267 வீரர், வீராங்கணைகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு 10,09,918 பதிவுகள் அதிகமாக பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெலும் போட்டிகளில், 14,86,912 பள்ளி மாணவ மாணவியர்கள். 5,35,965 கல்லூரி மாணவ மாணவியர்கள். 38,058 மாற்றுத்திறனாளிகள், 69,890 அரசு ஊழியர்கள். 5,07,741 பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்கின்றனர்.
மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 1,09,633 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சென்னையில் 99,119 நபர்கள் பதிவு செய்துள்ளனர். நான் பொறுப்பு வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக பதிவாக 1,74,462 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பான ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்படி இன்று ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துக்கொள்ளும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 2.52 கோடி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் போல விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நம் மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பது போல விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத்துறை. நம் விளையாட்டு வீரர்கள். உலக அரங்கில் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். எனவே, இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் தமிழக விளையாட்டு வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை வழங்கிய அமைச்சர் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான சின்னம் மற்றும் கொடியினையும், விளையாட்டு வீரர்களுக்கான ஜெர்சியையும் அறிமுகப்படுத்தி, மகளிர் கால்பந்து போட்டியினை டாஸ் செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி மாவட்ட வருவாய் அலுவலர்/பொது மேலாளர் (நிர்வாகம்) மரு.ரெ.சுமன், பொது மேலாளர் ல.சுஜாதா, அரசு அலுவலர்கள், போட்டியில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.