ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் வாழ்த்து

இந்தியாவிலேயே முதல் முறையாக தடகள போட்டியில் மகளிர் கோலூன்றி தாண்டுதலில் பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் வாழ்த்து
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on: 

சென்னை,

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாராட்டு

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

வாழ்த்து

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தாயகம் திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ் (Athletics), பரணிகா இளங்கோவன் (Athletics), அபிநயா ராஜராஜன் (Athletics), விஷால் தென்னரசு கயல்விழி (Athletics), கமலினி (Cricket) ஹரிஹரன் (Badminton) ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சிறப்பு நிதி உதவி ரூ.7 லட்சம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு, சிறப்பு நிதி உதவி ரூ.7 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொள்ளும் 37 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 2.59 கோடி வழங்கப்பட்டது. மேலும், ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்க தொகை ரூ. 50 லட்சத்தில் இருந்து, ரூ. 75 லட்சமாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாகவும், வெண்கலப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை திட்டம்

மேலும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் வீரர் வீராங்கனைகள் ஊக்கத் தொகைப் பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

17 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டனர். இதில் 11 வீரர், வீராங்கனை 2 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 12 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய சாதனை

இதில் வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் முதல் வீரர் என்ற பெருமையும், தடகளம் மகளிர் 400 மீ. தடை ஓட்டத்தில் 54.75 நொடிகளில் கடந்து,பி.டி.உஷாவின் 42 வருட தேசிய சாதனையினை முறியடித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக தடகளப் போட்டியில் மகளிர் கோலூன்றி தாண்டுதலில் பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.

ரூ.1.55 கோடி உயரிய ஊக்கத் தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் தடகளம் மகளிர் 4×400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், தடகளம் கலப்பு 4×400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், தடகளம் மகளிர் 400 மீ. தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

ரூ. 6.60 கோடி உயரிய ஊக்கத் தொகை

மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்ற கமலினிக்கு ரூ. 75 லட்சமும், தடகளம் கலப்பு 4×400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் 4×400 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்ற விஷாலுக்கு ரூ. 80 லட்சமும், ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் அணியில் வெண்கலப் பதக்கமும் வென்ற அபய் சிங்கிற்கு ரூ. 80 லட்சமும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்குவாஷ் மகளிர் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவிற்கு ரூ. 60 லட்சமும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்குவாஷ் ஆடவர் அணி - வெண்கலப் பதக்கமும் வென்ற வேலவன் செந்தில்குமாருக்கு ரூ. 60 லட்சமும், தடகளம் கலப்பு 4×100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயாவிற்கு ரூ. 30 லட்சமும், தடகளம் மகளிர் கோலூன்றித் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு ரூ. 30 லட்சமும், தடகளம் ஆடவர் 4×400 மீ. தொடர் ஓட்டம் - வெண்கலப் பதக்கம் வென்ற ராஜேஷ் ரமேஷ் அவர்களுக்கு ரூ. 30 லட்சமும், பேட்மிண்டன் ஆடவர் அணி-வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிஹரனுக்கு ரூ. 30 இலட்சமும், ஸ்குவாஷ் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்ற ஷமீனா ரியாஸ்க்கு ரூ. 30 லட்சமும் என மொத்தம் ரூ. 6.60 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் (நிர்வாகம்) ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com