ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

2025-26-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்
Published on

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இன்று தேசிய மீன்வளர்போர் தினத்தை முன்னிட்டு நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் விடும் பணிகளை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியபோது, "தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து, பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 லட்சம் செலவில் ஆறுகளில் விடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் மணிமுத்தாறு அரசு மீன்குஞ்சு உற்பத்தி மையத்தில் வளர்க்கப்பட்ட 8-10 செமீ அளவுள்ள 1 லட்சம் மீன்விரலிகள் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத் துறை மூலம் உள்நாட்டு மீனவர்களை பாதுகாக்கின்ற விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோல, பல்வேறு குளங்களில் மீன் இருப்பு செய்வது, அந்த குளங்களை குத்தகை எடுத்தவர்களே மீன்களை வாங்கி வளர்ப்பது அதன் மூலம் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்ற வகையிலே பல்வேறு திட்டங்கள் மீன் வளர்ப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் குளங்கள் மட்டுமல்லாது ஆறுகளிலும் மீன்களை இருப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆணைகளை வழங்கி, கடந்த இரண்டு ஆண்டு காலமாக தாமிரபரணி, பவானி, காவேரி ஆகிய ஆற்று படுகைகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்து, இதில் மீன்பிடிக்கின்ற உள்நாட்டு மீனவர்கள் பல்வேறு வகையில் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி இன்றைய தினம் தேசிய மீன்வளர்ப்பு தினமாக கொண்டாடும் வகையில் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்கின்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே உள்நாட்டு மீனவர்கள் குளங்களில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆறுகளிலும் மீன் பிடிக்கின்ற வகையிலே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இன்றைய தினம் தொடங்கப்பட்டிருக்கின்றது" என தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின "அலைகள் திட்டம்" வாயிலாக மீனவ மகளிர் வாழ்வாதாரத்தினை உயர்த்திட தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி சார்ந்த 9 மகளிர் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு முன்கடனாக தலா ரூ.25,000 மற்றும் கடல்சார் கல்வி பயிலும் மீனவ மாணவர்களுக்கு கல்வி பயிலும் ஊக்கத் தொகையாக ரூ.1,25,000-க்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மீன் மற்றும் கடல்பாசி உற்பத்தியினை பெருக்குவதற்கு சிறப்பாக பங்களித்த மீன்/கடற்பாசி வளர்ப்போருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் சந்திரா, தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர்கள் தீபா, மோகன்ராஜ், உள்நாட்டு மீனவ பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com