

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று (08.06.2026) திண்டுக்கல் மாவட்டம், பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவுவாயிலை திறந்து வைத்தார். மேலும், மேற்கு கிரிவீதியில் ரூ.51.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இராக்கால நந்தவனத்தை திறந்து வைத்தார். இந்த நந்தவனமானது 50 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு திருக்கோவிலில் நடைபெறும் பூஜைக்கான பூக்களை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், மின்இழுவை நிலையம், காத்திருப்போர் கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாத தயாரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அன்னாசெட்டி மடம், புதிய அன்னதானக் கூடம் அமைவிடம் மற்றும் கிரிவீதி பாதவிநாயகர் கோவில் முதல் குடமுழுக்கு நினைவரங்கம் வரை அதிஉயர நிழல் மண்டபம் கட்டும் பணிகள், கிரிவீதி சுற்றுச்சுவர் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சுற்றுலா பேருந்து நிலையத்தில் கிரிவீதி மரகன்றுகளுக்கான சொட்டு நீர் பாசன பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர், பெருந்திட்ட வளர்ச்சி பணிகளில் மலைக்கோவிலில் கம்பிவட ஊர்தி நிலையம், மின்தூக்கி மற்றும் அலங்கார பணிகளை ஆய்வு செய்தார்கள்.
மலைக்கோவிலில் நடைபெற்று வரும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்து, பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும், மலைக்கோவிலில் உள் மற்றும் வெளி பிரகார மண்டபங்களையும், மின்இழுவை ரெயில் நிலையம் காத்திருப்போர் கூடத்தையும் ஆய்வு செய்தார்கள்.
மேற்கண்ட ஆய்வுகளுக்கு பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் திருக்கோவிலின் தலைமை அலுவலகத்தில் துறை செயலாளர், ஆணையர் மற்றும் திருக்கோவில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்திட்ட வளர்ச்சி பணிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும், கட்டணமின்றி இலசவமாக தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் விரைவாக தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.ரவிமனோகரன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலாளர் ஜெ. குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய், அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், திருக்கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, துணை ஆணையர் சா.வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.