ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு!

அமைச்சர் சீ.ரமேஷ், பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தியதோடு, அன்னதானத்தின் தரம் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு!
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று (23.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார்.

சுவாமி திருக்கோவிலானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் புகழ்பெற்ற வைணவத் திருக்கோவில்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள், அயல்நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இத்திருக்கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து, ஒருங்கிணைந்த திருக்கோவில் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கட்டணச் சீட்டுகள், அன்னதானத் திட்டத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் முறை குறித்த விபரங்களையும் திருக்கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அன்னதானத் திட்டத்தின் சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம், உணவு பொருட்களின் வைப்பறை மற்றும் இருப்பு விபரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தியதோடு, அன்னதானத்தின் தரம் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் திருக்கோவில் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் அவர்கள் எவ்வித சிரமமுமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கும், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை தொடர்ந்து கண்காணித்து வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து நிலையிலும் பக்தர்கள் முழு மனநிறைவு பெற்றிடும் வகையில் நமது செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உறுப்பினர் பி.என்.ஸ்ரீதர் மணப்பாறை சட்டமன்ற ரா.கதிரவன், மண்டல இணை ஆணையர் சு. ஞானசேகரன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ. சிவராம்குமார், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இணை ஆணையர்/செயல் அலுவலர், சூரியநாராயணன், பெரம்பலூர் இணை ஆணையர் கார்த்திக், தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) எம். பழனி, மலைக்கோட்டை திருக்கோவில் உதவி ஆணையர் அருள்செல்வன், திருவானைக்காவல் திருக்கோவில் உதவி ஆணையர் கி. உமா, மண்டல செயற் பொறியாளர் முத்து ஜெயம், மண்டல செயற்பொறியாளர் (மின்) சசிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com