அமைச்சர் ராஜ் மோகன் சிறந்த பங்களிப்பை வழங்குவார்- நடிகர் ராகவா லாரன்ஸ்

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறை இலாகாவாக ஒதுக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ராஜ் மோகன் சிறந்த பங்களிப்பை வழங்குவார்- நடிகர் ராகவா லாரன்ஸ்
Published on

தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்பு ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கச் பொதுச்செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,ராஜ்மோகனுக்கு, திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சினிமா துறையில் பல குறைகள் இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் நமது முதல்-அமைச்சரை விட, நமது துறையில் என்ன நடக்கிறது? என்பது பற்றி அனுபவமே இல்லாத ஒருவரிடம் இதை எப்படிச் செய்வது? எனவே தயவுசெய்து அரசு டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துங்கள். உள்ளாட்சி வரியை ரத்து செய்யுங்கள். சிறு திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியத்தை அதிகரியுங்கள். ராஜ்மோகனை நான் இழிவுபடுத்தவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே'', என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷாலின் இந்த கருத்துக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது: நமது மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் நண்பர் விஜய், நிச்சயமாக இந்த முடிவை ஆழ்ந்த யோசனை மற்றும் கவனமான பரிசீலனை இன்றி எடுத்திருக்க மாட்டார். அவசரப்பட்டு எதிர்வினையாற்றுவதை விட, சிறிது கால அவகாசம் கொடுப்போம். அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் திரைப்படத் துறையினரின் நலனுக்காகத் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவார் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com