

சென்னை,
திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா – முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், விரைவில் நடைபெறவுள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நானும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து இன்று திருவண்ணாமலையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரிவல பாதையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், திருக்கோயிலில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
ஆய்வின்போது, பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியதுடன், அதன் தரத்தையும் ஆய்வு செய்தோம். மேலும், உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, கிரிவலப் பாதை மேம்படுத்துதல், தங்குமிட வசதிகள், குடிநீர், கழிவறைகள், உணவுக் கூடங்கள் மற்றும் அன்னதான திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கோவில்களுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஐந்து ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் கோவில்களில் தேவையான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவோம்.
அண்ணாமலையார் திருவருளால், கார்த்திகை தீபப் பெருவிழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.