

சென்னை,
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக தெரிவு செய்யப்பட்ட 22 பேருக்கான துறை ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழக மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II வாயிலாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-II, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு சுமார் 1,200 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 28.9.2025 அன்று நடைபெற்றது. அந்த தேர்விற்கு மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer - ASO) பணிக்காக அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு 22 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் இன்று (22.10.2026) அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி –II)-க்கு தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.