

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 68). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு பேத்தி உறவு முறையான 9-ம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தியதில் ராஜூ பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன். குற்றம் சாட்டப்பட்ட ராஜூவுக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பேத்தி உறவு முறையிலான சிறுமியுடன் தகாத உறவுகொண்ட குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டைனையை தனித்தனியாக அனுபவிக்கவும் தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதால், ராஜூவுக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.