துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

திமுக இந்து விரோத கட்சிதான் என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 வானதி சீனிவாசன்
Published on: 

சென்னை,

திமுக பொதுச்செயலாளர், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் துரைமுருகனை அவமதித்த கி.வீரமணியை, மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வெறுப்பை கக்கியிருக்கிறார் கி.வீரமணி

இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இனியும் இந்து மதத்தை கேலி செய்தால் திமுக என்ற கட்சியே இருக்காது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவைத் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரையின் திருமணம் நவம்பர் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேத மந்திரங்கள் முழங்க செந்தாமரையின் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம், சமஸ்கிருத சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க புரோகிதத் திருமணமாக நடந்துள்ளது. இதையறிந்து, பெரிதும் வேதனையும், வெட்கமும் அடைகிறோம். இது 45 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் உள்ள துரைமுருகனுக்கு தீராத களங்கம்" என்றெல்லாம் தனது இந்து மத வெறுப்பை கக்கியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்

இந்து அதாவது தமிழர் முறைப்படி திருமணம் செய்ததை கண்டு கொந்தளித்து, பொதுவாழ்க்கைக்கே அவமானம் என்றெல்லாம் பேசும் வீரமணி, திமுகவில் உள்ள, மாற்று மதத்தினர் அவரவர் மதச் சடங்குகளின்படி, மத போதகர்களை வைத்து திருமணங்களை நடத்தும்போது மட்டும் வாய்மூடி மவுனமாக இருக்கிறார். அந்த ரகசியம் அனைவரும் அறிந்ததுதான். திராவிடர் கழகம் என்பதே, மதம் மாற்ற வந்த, ராபர்ட் கால்டுவெல், ஆரிய - திராவிட கட்டுக்கதைகளின் அடிப்படையில் உருவான இயக்கம்.

இந்து மதத்திற்கு, இந்து அதாவது தமிழர் திருமண முறைக்கு மட்டும் எதிரான கட்சி என்பது வீரமணி அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. அதனால், திமுகவில் உள்ள இந்து அல்லாத மதத்தினர் அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தும்போது வீரமணி உள்ளிட்டோர் மவுனமாக கடந்து செல்கின்றனர். இந்து மத முறைப்படி நடந்தால் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணத்தை கேலியும், கிண்டலும் செய்த வீரமணியின் அறிக்கை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். வீரமணியின் அறிக்கை சரிதான். திமுக இந்து விரோத கட்சிதான் என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது தனது கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகனை அவமதித்த வீரமணியை, ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், துரைமுருகனை அவமதித்ததை, ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாகவே வரலாறு பதிவு செய்யும்.

இந்து விரோத இயக்கம் மட்டுமே

இந்து திருமண முறையை அவமதித்த வீரமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற மதங்களை விமர்சிக்காமல், இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் திராவிடர் கழகம், நாத்திக இயக்கம் அல்ல; இந்து விரோத இயக்கம் மட்டுமே. இதை தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு 90 சதவீதம் புரிந்திருக்கும். இனியும் இந்து மதத்தை கேலி செய்தால், அவமதித்தால் திமுக என்ற கட்சியே இருக்காது. இனி வரும் காலம் அதை உணர்த்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X