மு.க.ஸ்டாலின் துரோக மாலைகளையே பூமாலையாக அணிந்து கொள்கிறார் - அன்புமணி

இன்னும் 4 நாள்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக பெண்கள் அவர்களின் வாக்குரிமையை பயன்படுத்துவார்கள்.
மு.க.ஸ்டாலின் துரோக மாலைகளையே பூமாலையாக அணிந்து கொள்கிறார் - அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்பைத் தட்டிப் பறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதை தனது பெருமையாகக் கூறிக் கொண்டு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார். எட்டப்பர்களை விஞ்சும் அளவுக்கு துரோகங்களையும், நயவஞ்சகங்களையும் செய்து விட்டு, அவற்றை வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற வெற்றியைப் போல காட்டிக் கொள்வது மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

மு.க.ஸ்டாலின் முதலில் மாய உலகிலிருந்து இறங்கி வாருங்கள். நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும் நன்மை செய்யவில்லை; மாறாக, மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தைச் செய்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக கனவாகவே இருந்து வந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இடங்களை மகளிர் அலங்கரிப்பதற்கான வாய்ப்பு கைக்கூடி வந்த நிலையில், அதைக் கெடுத்த பாவத்தை தான் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். துரோக மாலைகளை பூமாலைகளாக சூடிக் கொள்வதால் மு.க.ஸ்டாலின் செய்த பாவம் புண்ணியமாகி விடாது. அதற்கான தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது.

திமுகவும் சரி.... மு.க.ஸ்டாலினும் சரி... எந்தக் காலத்திலும் பெண்களை உணர்வு உள்ள உயிராக மதித்ததே இல்லை. அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதையும், உரிமைகளை காவு கொடுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 20 பெண் மக்களவை உறுப்பினர்களும், 2031- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 117 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கிடைத்திருப்பார்கள். அந்த வாய்ப்பைச் சீரழித்த குற்ற உணர்வு உங்களின் மனசாட்சியை உறுத்தவில்லையா?

மு.க.ஸ்டாலினாலும் அவர் தலைமையிலான திமுக அரசாலும் தமிழ்நாட்டு பெண்கள் பெற்றது ஏதும் இல்லை.... ஆனால், இழந்தது ஏராளம். மது மற்றும் கஞ்சா போதைகளை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அரசை மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 44,418 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக 62,489 குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இவற்றைத் தடுக்கத் தவறியதற்காக வருந்தாத மு.க.ஸ்டாலின், மகளிருக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தைப் பறித்ததற்காக பெருமைப்பட்டுக் கொள்வது அவரது உணர்வுகளும், எண்ணங்களும் எந்த அளவுக்கு அழுக்கடைந்திருக்கின்றன என்பதையே காட்டுகிறது.

எந்த வினைக்கும் எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தைப் பறிப்பதற்காக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எவ்வாறு வாக்களித்தனவோ, அதேபோல் இன்னும் 4 நாள்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக பெண்கள் அவர்களின் வாக்குரிமையை பயன்படுத்துவார்கள். அதனால், அரசியல்ரீதியாக திமுகவுக்கு விழும் அடி அந்தக் கட்சியால் தாங்கள் முடியாத அளவுக்கு இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com