

காஞ்சிபுரம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள காஞ்சிபுரம் வந்தார். கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கட்சி சார்பில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இந்த பயணத்தின்போது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைத்து 10 நாட்கள் நடைபயணம் நடத்தப்படும். அகிம்சையின் குறியீடு மகாத்மா காந்தி. தேசத்திற்கு காந்தியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நிலையும் இருந்தது. அவரது பெயரை எடுத்து விட்டு 125 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு விபி ஜி ராம் ஜி என்ற பெயரை ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரையே அந்த திட்டத்துக்கு வைக்க வேண்டும்.
100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை 125 நாட்கள் திட்டமாக மாற்றியிருக்கிறது மத்திய அரசு. நாங்கள் சொல்வது 200 நாள் வேலைத்திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். தினசரி சம்பளம் ரூ.336 என்பதை மாற்றி ரூ.700 ஆக்கிட வேண்டும். இந்த திட்டம் ஏழைகள் முன்னேறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். நிதிச்சுமை குறித்து முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதை மத்திய அரசு தாமதிக்காமல் கொடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தவும், நெசவாளர்களின் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும் வேண்டும். பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைப்பது அந்த பகுதி மக்களின் கருத்துக்கு எதிரானது. எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.