பெருங்குடி, சோழிங்கநல்லூரில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் உள்ள பள்ளங்களை பருவமழைக்கு முன்னதாக சீரமைக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பெருங்குடி, சோழிங்கநல்லூரில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
அமைச்சர் விக்னேஷ்
Published on: 

சென்னை,

பொதுமக்களை தங்கவைப்பதற்கான 27 நிவாரண முகாம்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தகவல். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஆய்வுக்கூட்டம்

இன்று (12.10.2026) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சேவைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.

8,909 வண்டல் வடிகட்டி தொட்டிகள்

இக்கூட்டத்தில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், பெருங்குடி மண்டலத்தில் 154.19 கி.மீ. நீளத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புதிய மழைநீர் வடிகால் பணிகளில் 145.27 கி.மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கால்வாய் மேம்பாட்டுப் பணிகளில் 3,163 மீ. நீளத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகளில் 3,102 மீ. நீளத்தில் முடிக்கப்பட்டுள்ளன. 9281 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் முதற்கட்டமாக 100 சதவீதம் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 8,909 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் (96 %) தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 109.56 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளில் 96.46 கி.மீ. நீளத்தில் (89%) தூர்வாரப்பட்டுள்ளது. 10 குளங்கள் மேம்பாட்டுப் பணிகளில் 8 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு 2 குளங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. 73 மீ. நீளத்தில் விடுபட்ட 9 மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

100 சதவீதம் தூர்வார வேண்டும்

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1,23,756 மீ. நீளத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட புதிய மழைநீர் வடிகால் பணிகளில் 95,700 மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, 13,385 மீ. நீளத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. 15.39 மீ. நீளத்தில் எடுத்து கொள்ளப்பட்ட செகரடரியேட் காலனி கால்வாய் பணிகளில் 406 மீ. நீளத்தில் முடிக்கப்பட்டுள்ளது. 4,033 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் முதற்கட்டமாக 100 சதவீதம் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 3,733 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 60,636 மீ. நீளத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளில் 59,978 மீ. நீளத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. 11 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 219 மீ. நீளத்தில் விடுபட்ட 21 மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கும் 18 தாழ்வான பகுதிகளில் 100 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்புகளும், 46 இடங்களில் 45 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் பம்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணிகள்

மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூர்வாரும் பணிகள், கால்வாய்களில் தடுப்பு சுவர்களை உயர்த்தி கட்டுதல் மற்றும் வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், குளங்கள் புனரமைப்பு, சுரங்கபாதைகளில் உள்ள கிணறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொண்டு 20.10.2026க்குள் முடிக்க வேண்டும். தூர்வாரும் போது அகற்றப்படும் வண்டல்களை உடனுக்குடன் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு தடுப்புகள்

மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகளை அகற்றி, நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மதகு அமைப்பு ஏற்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் மின் மோட்டார் பம்புகள் மற்றும் டீசல் மோட்டார் பம்புகளையும், மீட்பு பணிகளை மேற்கொள்ள படகுகளையும், பாப்காட் வாகனங்கள், மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள், சக்திமான் மர அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி., பொக்லைன், மின் ஏணி, ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், சக்ஷன் கம் ஜெட்டிங் இயந்திரங்கள், டேலஸ்கோபிக், தயார்நிலையில் வைக்க வேண்டும். விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.

மின் கசிவுகள்

மின் இணைப்பு பெட்டிகளை உயரமான இடத்தில் அமைத்து, மின் கேபிள்களை பூமிக்கடியில் புதைக்க வேண்டும். தாழ்வான மின் ஒயர்களை சரிசெய்யும் பணியினை மூன்று நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு மின் கசிவுகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

38 அம்மா உணவகங்கள்

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் உள்ள பள்ளங்களை பருவமழைக்கு முன்னதாக சீரமைக்க வேண்டும். பெருங்குடி மண்டலத்தில் உள்ள 17 நிவாரண முகாம்கள் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 10 நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்கவைப்பதற்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், பெருங்குடி மண்டலத்தில் உள்ள 6 மைய சமையல் கூடங்கள் மற்றும் 21 அம்மா உணவகங்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 17 அம்மா உணவகங்களில் உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இந்த உணவு மையங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பு அலுவலர்களை நியமித்து பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

திடக்கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதை தவிர்க்க பொதுமக்களின் இல்லங்களிலிருந்து பெற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பாம்புகளை பிடிக்க தீயணைப்பு வீரர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பணம் விரயம் இன்றி

மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு உருவாக்கத்தைத் தடுத்து, டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களின் பரவலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணம் விரயம் இன்றி அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு முடித்திட வேண்டும். என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மகேஷ்வரி ரவிக்குமார், (பெருங்குடி), பாஸ்கர பாண்டியன்,(சோழிங்கநல்லூர்), தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், காவல் உதவி ஆணையாளர்கள் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பரத் (நீலாங்கரை), விஜயன் (தாம்பரம்), போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் கஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வன அலுவலர், சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மருத்துவத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com