

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி தாய்- 2 மகன்கள் உயிரிழந்தனர். மற்றொரு மகன் படுகாயம் அடைந்தான்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மதுஷா ஜாலி(வயது35). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெனாசிர்பேகம் (29). இவர்களுடைய மகன்கள் முகமதுஜாசித்(10), முகமதுஹாலித் (5), முகமதுஜாவீத் (12). நேற்று காலை 10.15 மணி அளவில் பெனாசிர்பேகம் தனது மகன்கள் முகமதுஜாசித், முகமதுஹாலித் முகமதுஜாவீத் ஆகியோருடன் ஸ்கூட்டரில் தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அம்மன்பேட்டை அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே சிமெண்டு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக திடீரென பெனாசிர்பேகத்தின் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பெனாசிர்பேகம் மற்றும் அவருடைய மகன்கள் முகமதுஜாசித், முகமதுஹாலித் ஆகியோர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகன் முகமதுஜாவீத் படுகாயமடைந்தான்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனே லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சிறுவன் முகமதுஜாவீத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பகுதியைச் சேர்ந்த சூர்யாவை(27) போலீசார் கைது செய்தனர்.