குழந்தையை கொன்று தாய் தற்கொலை: என்ன காரணம்..? - வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையை கொன்று தாய் தற்கொலை: என்ன காரணம்..? - வெளியான அதிர்ச்சி தகவல்
Published on: 

பரமக்குடி,

குடும்பத்தினருக்கு தெரியாமல் கடன் வாங்கியதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விபரீத முடிவு எடுத்து மூச்சை திணறடித்து 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மகளிர் குழு கடன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் சின்னநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 28). இவருடைய மனைவி பிரியங்கா (25). இருவரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய மகள் திவ்யா (2).

நீதிராஜன் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதற்கிடையே பிரியங்கா கணவருக்கு தெரியாமல் மகளிர் குழு மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனுக்காக வாரம் ஒருமுறை பணம் செலுத்தி வந்தார்.

இதையடுத்து இந்த வாரத்துக்கான கடன் தொகையை வசூலிப்பதற்காக குழுவை சேர்ந்த நபர் நேற்று மாலை சேமானூர் கிராமத்தில் இருந்து வந்துள்ளார். அப்போதுதான், பிரியங்கா கடன் வாங்கிய விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் பிரியங்கா மற்றும் அவரது மாமனார், மாமியாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரியங்கா மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

குழந்தையை கொன்ற கொடூரம்

இந்த நிலையில் நேற்று மாலை பிரியங்கா தனது 2 வயது குழந்தை திவ்யாவின் மூக்கு, வாயை பொத்தி மூச்சை திணறடித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் மேல்மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது.

நீண்ட நேரமாகியும் அந்த அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்காமல் இருந்ததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியங்கா தற்கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு

மேலும் அருகில் குழந்தை திவ்யாவும் இறந்து கிடத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com