

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கலா சேதுபதி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய பாவையர் அரங்கில் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் மொத்தம் 15,375 பேர்களுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. அதில் நேரடியாக 785 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 40 பேர் பதக்கங்களை பெற உள்ளனர்.
இந்த விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, பட்டங்களை வழங்குகிறார். உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் மற்றும் செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.