வினோத நோயால் பாதித்த மகளுடன் தினமும் பள்ளிக்கு வந்து பணிவிடை செய்யும் தாய் - சென்னை அருகே உருக்கம்

கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் மூளையை பாதிக்கும் வினோத நோயால் மாணவி பாதிக்கப்பட்டார்.
வினோத நோயால் பாதித்த மகளுடன் தினமும் பள்ளிக்கு வந்து பணிவிடை செய்யும் தாய் - சென்னை அருகே உருக்கம்
Published on

சென்னை,

மனித வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை சுட்டிக்காட்டவே, "கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று ஒளவையார் பாடியிருக்கிறார்.

அப்படிப்பட்ட கல்வி உடல்நலம் பாதித்த தங்களுடைய மகளுக்கும் எப்படியும் கொடுத்துவிட வேண்டும் என்று ஏங்கித்தவிக்கும் ஒரு தாயின் உருக்கமான வாழ்க்கை போராட்டத்தைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

சென்னையை அடுத்த புழல் கேம்ப்பில் வசித்து வரும் கோவிந்தராஜ் - சரஸ்வதி தம்பதிக்கு கோகுலவாஷினி என்ற மகள் உள்ளார். டீக்கடை நடத்தி வரும் இந்தத் தம்பதி, அதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில், மகளை அங்குள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.

எல்.கே.ஜி. முதல் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவி கோகுலவாஷினி, படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தாள். பிளஸ்-1 படிப்பையும் அதே பள்ளியில் அவர் தொடர்ந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் மூளையை பாதிக்கும் வினோத நோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நியூரோ மெலோடோசஸ் என்ற அரிய நோய் பாதித்திருப்பதாக தெரிவித்தனர். அதனால், மாணவி கோகுலவாஷினியால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிகிச்சைக்கும் அதிக பணம் தேவைப்பட்டதால், அவருடைய பெற்றோரும் சொந்த வீட்டை விற்று மகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். ஒரு ஆண்டாக மேற்கொண்ட தொடர் சிகிச்சையால் அவரது உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில், சிகிச்சைக்கான செலவும் ரூ.15 லட்சத்தை கடந்துவிட்டது. நடுத்தர குடும்பம் என்றாலும் கோவிந்தராஜ்-சரஸ்வதி தம்பதியினர் முயற்சியை கைவிடாமல், மகளின் உடல்நலனில் அக்கறை காட்டி கவனித்துக்கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்து படிக்கத் தொடங்கிய கோகுலவாஷினி, மற்ற மாணவிகளை போல் இயல்பாக செயல்பட முடியாதபோதும், நன்றாகவே படிக்கத் தொடங்கினார்.

ஆனால், அவரது படிப்புக்காக தாய் சரஸ்வதி செய்த தியாகம் தான் அளப்பறியது. அதாவது, தினமும் கோகுலவாஷினியை அவரது தந்தை பைக்கில் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்று டீக்கடையை கவனித்து வருகிறார். அதுவரை டீக்கடையை கவனித்து வரும் சரஸ்வதி, அதன்பிறகு பள்ளிக்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வருகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, தேவைப்படும் போதெல்லாம் வகுப்பறைக்கு சென்று மகளை கவனித்துக்கொள்கிறார்.

மகளுக்கு உணவு ஊட்டுவது, இயற்கை உபாதைக்கு அழைத்து செல்வது என்று அனைத்தையும் அவரே கவனித்துக்கொள்கிறார். இது ஏதோ, ஒரு நாள்.. 2 நாள்.. நடந்த நிகழ்வு கிடையாது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சரஸ்வதி இவ்வாறு தனது மகளை அக்கறையுடன் கவனித்து வருகிறார்.

இந்த தாயின் தியாகத்தை கேள்விப்பட்ட பள்ளியின் நிர்வாகியும், சென்னை வாழ் நாடார் சங்கத்தின் தலைவருமான டி.தங்கமுத்து, நேற்று அந்த தாயையும், மாணவி கோகுல வாஷினியையும் அழைத்து கவுரவித்தார். அந்த நேரத்தில், சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வக்குமார், பள்ளியின் முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவ-மாணவிகள் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அதே விழாவில்தான் மாணவி கோகுலவாஷினியின் தாயார் சரஸ்வதியும் பாராட்டி கவுரவிக்கப்பட்டார். நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை மாணவி கோகுலவாஷினி உதவியாளருடன் எதிர்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com