கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்

விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் தொல்லையால் சோகம்.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த விபரீதம்
Published on

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி (வயது 38) என்ற மனைவியும், 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதால் கலைச்செல்வி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அதிகளவில் கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே கலைச்செல்வி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்வது என விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என நினைத்த கலைச்செல்வி கடந்த 19-ந்தேதி குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு அவரும் விஷம் குடித்துவிட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

அவரது மகளும், மகனும் தற்போது உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com