நண்பன் இறந்த அதிர்ச்சியில் விசைப்படகு ஓட்டுநர் உயிரிழப்பு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரகாஷ், ஏகாம்பரம்
Published on

சென்னை,

சென்னை அருகே எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் நண்பர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் விசைப் படகு ஓட்டுநர் பரிதாபமாக இறந்தார்.

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

சென்னை அருகே எண்ணூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விசைப்படகு ஓட்டுநர் அதிர்ச்சியில் உயிரிழப்பு

பெரியகுப்பத்தை சேர்ந்த பிரகாசின் நண்பர் ஏகாம்பரம்(47) என்பவர் விசைப்படகு ஒட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று மீன் பிடித்துக் கொண்டு இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு. அதிகாலை 2 மணிக்கு வந்தார். அப்போது அவரது நண்பர் பிரகாஷ் உயிரிழந்த செய்தியை கேட்டுள்ளார். உடனே கதறி அழுதபடி அவரது செல்போனில் பிரகாசின் புகைப்படத்தை பார்த்த ஏகாம்பரம் அதிர்ச்சியில் ஓட்டுநர் இருக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மீனவர்களிடையே சோகம்

இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் இறந்த செய்தி கேட்டு விசைப்படகு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரியகுப்பம் மீனவ கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com