முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்

முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை,

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது.

கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர். அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com