12-ம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு - நெல்லை சரக டி.ஐ.ஜி தகவல்

12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
12-ம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு - நெல்லை சரக டி.ஐ.ஜி தகவல்
Published on

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியும் மாணவி கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி நேற்று மாலையில் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது ஆடைகளும் களைந்து கிழிந்த நிலையில் இருந்தன. கழுத்தை துண்டால் இறுக்கியதற்கான தடயங்களும் இருந்தன. எனவே மாணவி தனியாக சென்றதை அறிந்த மர்மநபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் குறுக்குச்சாலை- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், "நேற்று முன்தினம் இரவில் மாணவி மாயமானவுடன் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அலைக்கழித்தனர். அங்கு புகார் கொடுக்க சென்றதும் மீண்டும் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுக்குமாறு கூறி மாறி மாறி அலைக்கழித்தனர். போலீசார் இரவில் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தால் மாணவியை உயிருடன் மீட்டிருக்கலாம். மாணவியை கொடூரமாக கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன், துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் கிராமமக்கள் இரவிலும் போராட்டத்தை கைவிடாது தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் குறுக்குச்சாலை- ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இறுதியில் குற்றவாளிகளை இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேடநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com