

சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள இக்கொடூரச் செயலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இயற்கை உபாதைக்காகக் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவிக்கு இத்தகைய அவலம் நேர்ந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழக அரசு மற்றும் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு இத்தகைய வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும். இதுபோன்றதொரு கொடூரம் இனி எப்போதும் நிகழாத வண்ணம், பெண்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதியையும், தகுந்த இழப்பீட்டையும் வழங்க வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.