

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து 4 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வாலிபரை, சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி 3-வது மைல் கந்தன்காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் மனைவி சசிகலா (வயது 45). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமான மகன் தனியாக வசித்து வருகிறார். கணவர் சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் சசிகலாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனியாக இருந்த சசிகலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். மேலும் சசிகலா அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சசிகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொலையாளியை உடனடியாகப் பிடிக்க எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த 3 மணி நேரத்திலேயே குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியபோது, "சசிகலாவின் வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு வாலிபர் கையில் அரிவாளுடன் வீட்டை விட்டு வெளியேறிய காட்சி பதிவாகியிருந்தது. அக்காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலையாளி சசிகலாவின் உறவினரான தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் விக்னேஷ்குமார்(எ) முனீஸ்(25) என்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 சவரன் நகையும் மீட்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ்குமார் தனது சித்தியான சசிகலா வீட்டிற்கு அடிக்கடி சென்று பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்றும் மதியம் பணம் கேட்டு சென்றுள்ளார். சசிகலா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ்குமார் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 4 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளார்.
பின்னர், அருகிலுள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, தனது வீட்டிற்குச் சென்றபோது போலீசார் அவரை வளைத்துப் பிடித்தனர். பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதே நேரத்தில் குற்றவாளியை 3 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்த அதிவேக நடவடிக்கையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.