விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தற்காலிக குட்டைகளை உருவாக்கி அதில் சிலைகளை கரைப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பசுமை தீர்ப்பாயம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

விநாயகர் சிலைகளை அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில் கரைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

சென்னையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்காக பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சென்னை பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யா நாராயணன், உறுப்பினர் பிரசாந்த் கார்கவே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தற்காலிக குட்டைகள்

அப்போது அரசு தரப்பில், 'சிலைகளை கரைப்பதற்கு குறுகிய நாட்களே உள்ளதால் மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இந்த ஆண்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரையில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது' என தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பாயம் கேள்வி

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், பட்டினப்பாக்கம், நீலாங்கரை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கடற்கரைகளிலும் அடுத்த ஆண்டு முதல் சிலைகள் கரைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாறாக தற்காலிக குட்டைகளை உருவாக்கி அதில் சிலைகளை கரைப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் வாதாடினார். சிலைகளுக்கு ஏற்ப கரைப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

உத்தரவாதம்

விசாரணை முடிவில், அடுத்த ஆண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், விநாயகர் சிலைகள் கரைப்பது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உத்தரவாதம் அளித்து தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com