இசைஞானிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

இசையின் மூலம் மனிதர்களை இணைக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இளையராஜா,நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

அன்னக்கிளி

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசை பயணத்தை தொடங்கி, 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.

இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து

இசையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை படைத்து வரும இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தெய்வீக மொழி

இசை என்னும் தெய்வீக மொழியின் வழியாக தமிழின் பெருமையையும் பண்பாட்டு செழுமையையும் உலக அரங்கில் உயர்த்தி பேணி வரும் இசைஞானி மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜாவிற்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மொழிகள், இனங்கள், நாடுகள் என அனைத்து எல்லைகளையும் தாண்டி, தனது மெய்மறக்க செய்யும் இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றிருக்கும் அவர், இசையின் மூலம் மனிதர்களை இணைக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பிரார்த்திக்கிறேன்

இசைஞானி இளையராஜா அவர்கள் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மேலும் பல ஆண்டுகள் தனது அற்புதமான இசை படைப்புகளால் உலக மக்களை மகிழ்வித்து, தமிழ் மண்ணிற்கும் இந்திய இசை உலகிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com