நான் அமைச்சரா இருக்கனா என்னனே எங்க அம்மாவுக்கு தெரியாது என உருக்கமாக பேசிய அமைச்சர் ரமேஷ்

உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை நோக்கி ஓடினால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும் என ரமேஷ் தெரிவித்தார்.
நான் அமைச்சரா இருக்கனா என்னனே எங்க அம்மாவுக்கு தெரியாது என உருக்கமாக பேசிய அமைச்சர் ரமேஷ்
Published on

திருச்சி,

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது:-

நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்கு தெரியும்; இருந்தும் அவர் சமையல் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார். அந்த வேலையை விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் தந்தை மாதம் 3,000 ரூபாய்க்கு வேலைக்கு போய் கொண்டிருக்கிறார். என் அண்ணன், தம்பி எல்லோரும் வேலைக்கு போய் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

என் வாழ்க்கை பயணத்தில் நான் 12-ஆம் வகுப்பில் படித்தது உயிரியல் பிரிவு. ஆனால், கல்லூரியில் எடுத்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்தது மருத்துவமனை நிர்வாகத்தில். இப்போது நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அரசியல்வாதியாக இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை திறன் வளர்கிறது

அதனால், கல்வி என்பது ஒரு பாடத்தை எடுப்பது, அதில் நம்மை திறம்பட செயல்படுத்துவது தவிர வேறு எதுவுமில்லை. அறிவை கற்றுக்கொள்வதுதான் கல்வி. ஆனால், அந்த கல்வியை வைத்துக்கொண்டுதான் சிந்தனை திறன் வளர்கிறது. அந்த சிந்தனை சமூக சிந்தனையாக மாறும்போது, உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை நோக்கி ஓடினால் நிச்சயமாக வெற்றி அடைய முடியும்.

வேலைக்கு போவேன்

நானும் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன்தான். எனக்கு அரசியலோ, பண பின்னணியோ கிடையாது. இன்றைக்கும் நான் அமைச்சராக இருக்கிறேன் என்பது என் அம்மாவுக்கு தெரியும் அமைச்சரின் பணிகள் என்ன் என்பதே தெரியாது. என் அம்மாவை வேலையை விட சொன்னபோது, 'என்னால் முடியும் வரை என் சொந்த காலில்தான் கடைசி வரை நிற்பேன். அப்படி எனக்கு தேவை வரும்போது உன்னிடம் வருவேன்; அதுவரைக்கும் வேலைக்கு போவேன்' என்றார் அம்மா.

சமையல் வேலை

நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்கு போகாமல் என்னுடன் இல்லை. அவர்கள் தங்கள் வேலையில்தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையிலிருந்துதான் நான் வந்திருக்கிறேன்; நீங்களும் வந்திருக்கிறீர்கள். பட்டம் வாங்கக்கூடிய அனைவரும் வந்திருக்கிறீர்கள், சரிதானே? என் அம்மாவும் சமையல் வேலை பார்த்துத்தான் என்னை மிகவும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார்.

சமுதாய நலன்

நானும் அரியர் வைத்தே என் படிப்பை முடித்தேன். நான் சமுதாய நலன் என்ற இலக்கை வைத்திருந்தேன், அதை நோக்கி ஓடினேன். கடவுள் புண்ணியத்திலும், என் முயற்சியினாலும் இந்த இடம் கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையை என்னுடைய முதல்-அமைச்சர் எனக்கு கொடுத்திருக்கிறார்.

வாய்ப்பு

நேர்மையாகவும் நியாயமாகவும் நான் நினைத்தது நடந்திருக்கிறது. அதற்கான சேவைகளை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே மாதிரியான வாய்ப்பு உங்கள் வீட்டு வாசலை தட்டி நிற்கும்போது, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தேசத்திற்காகவும், தமிழ் மண்ணிற்காகவும் நீங்கள் உழைக்க வேண்டும்; ஒரு சமூக சிந்தனை வளர வேண்டும். மேலும், பெற்றோர்கள் உங்களை நினைத்து பெருமைப்பட வேண்டும், அது மட்டும்தான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் எனத் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com