

நாகர்கோவில்,
நாகர்கோவில் மாவட்டத்தின் மையப்பகுதியான மீனாட்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அதில், குறிப்பிட்ட நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ஒரு புடவை வெறும் 99 ரூபாய்க்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அதிரடி சலுகை அறிவிப்பை தொடர்ந்து, நாகர்கோவில் நகர் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையிலேயே கடை முன்பு குவிய தொடங்கினர். விடிவதற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை முதலே பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதியே மக்கள் கடலாக காட்சியளித்தது.
கடையின் ஷட்டர் திறக்கப்பட்டவுடன், ஆபர் சேலைகளை முன் கூட்டியே வாங்குவதற்காக பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு கடையின் உள்ளே பாய்ந்தனர். இதனால் அங்கு பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலை தாங்க முடியாமல் கடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நுழைவாயில் கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.
கண்ணாடி சிதறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சில பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இறுதியில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஜவுளிக்கடையை உடனடியாக மூடுமாறு போலீசார் அதிரடியாக உத்தரவிட்டனர்.
அங்கு திரண்டிருந்த ஏமாற்றமடைந்த பெண்கள் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். மலிவு விலை சேலைக்கு ஆசைப்பட்டு ஜவுளிக்கடை கண்ணாடியே உடைந்த சம்பவம், நாகர்கோவிலில் இன்று பெரும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.