ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போக்சோ வழக்கு கைதி தப்பி ஓட்டம்..!

தப்பியோடிய ஸ்டீபன் ராஜை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதி தப்பி ஓட்டம்
Published on: 

கன்னியாகுமரி,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (36). இவர் தற்போது குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதி

கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள ஒரு வார்டில் கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பெற்ற வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பினார்

இந்த நிலையில், இன்று காலை வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஸ்டீபன் ராஜ் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடுதல்

இதையடுத்து போலீசார் உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடுதல் நடத்தினர். ஆனால் ஸ்டீபன் ராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தப்பிச் சென்றது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவில் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல்

கைதி மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

மேலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் இதுவரை ஸ்டீபன் ராஜ் சிக்கவில்லை.

போலீசார் தீவிர விசாரணை

தப்பியோடிய ஸ்டீபன் ராஜை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com