

நாகப்பட்டினம்,
பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரிவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 470-வது பெரிய கந்தூரி விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் 19-ந்தேதியும், (வியாழக்கிழமை) பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையும் நடக்கிறது.
முன்னதாக கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. இதில் தர்கா பரம்பரை கலிபா சிறப்பு துவா ஓதிய பிறகு சாஹிப் மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சை மன்னர் கட்டிக் கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசலில் உள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஒட்டுமினரா, முதுபக் மினரா ஆகிய மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.
விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் ஹாஜா நஜ்முதீன் சாஹிப் தலைமையில் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில், நாகை முஸ்லிம் ஜமாத் மற்றும் தர்கா ஆதீனஸ்தர்கள், மற்றும் சாதி, மத பேதமின்றி திரளானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு 45 கிலோ விலையில்லா சந்தனக்கட்டைகள் வழங்கிய தமிழக அரசுக்கு தர்கா நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.