ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்

மன் கி பாத் நிகழ்ச்சியில் நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டது பற்றி பிரதமர் மோடி பேசினார்.
ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாதம் தோறும், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில், 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி இன்று பேசினார்.

சோழர் கால செப்பேடுகள்

நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டது பற்றி பேசிய மோடி, “ சோழ பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரம் எண்ணி பெருமை கொள்கிறோம். விரைவில் நெதர்லாந்தில் இருந்து சோழர் கால செப்பேடுகள் கொண்டு வரப்பட உள்ளன. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன்.” என்றார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நெகிழ்ச்சியான தருணம்

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் "மனதின் குரல்" நிகழ்ச்சி வாயிலாக நம் பாரத மக்களுடன் உரையாற்றும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இ‌ன்றைய தினம் ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து உரையாற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டிருப்பது நம் ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கே பெருமிதமானது என நம் பிரதமர் கூறியிருப்பது தமிழர்கள் ஒவ்வொருவருக்குமே நெகிழ்ச்சியான தருணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

பிரதமர் மோடிக்கு நன்றி

நெதர்லாந்தில் இருந்து ஆனைமங்கலம் செப்பேடுகளை மீட்டெடுத்ததோடு, உள்நாட்டிலும் அதன் பெருமையைத் தொடர்ந்து பறைசாற்றி வரும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும்!

நமது தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து நம் பாரதப் பிரதமர் ஆற்றிய உரையை அனைவரும் கேட்பீர்! நமது பாரதப் பிரதமரைப் போலவே தமிழர் கலாசாரத்தைப் போற்றுவீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com