

சென்னை,
12-வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை அதிகரிக்கவும், நெசவாளர்களுக்கென உயரிய கவுரவத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்யும் கைத்தறித் தொழிலின் பெருமையைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கைத்தறி நெசவாளர்களைப் போற்றும் வகையில், 7.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி ரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
இத்தொழில் மூலம் மகளிர் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித்துறை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம், தொடர் வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டுவசதி திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்கிறேன். இவற்றை நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டமானது, தமிழக நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பிரீமியம் தர நிலை, சிறந்த கைவினைத் திறன் மற்றும் நவீன வண்ணங்களுடன் நேர்த்தியாக ஆடை நெய்து, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய வகையில் நவீன காட்சிப்படுத்துதல் வழியே சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கிடும்.
இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த அரசு, கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறை நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். "கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம்; கைத்தறிப் பொருட்களை வாங்கி ஆதரிப்போம்” என்ற உணர்வுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.