தேசிய கட்சிகள் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தேசிய கட்சிகள் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக டி.டி.வி.தினகரன் கூறினார்.
தேசிய கட்சிகள் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கின்றன டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கணேசகுமார், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று கிருஷ்ணகிரி, ஓசூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

எங்கள் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகள் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. அதே நேரத்தில் அருகில் உள்ள பக்கத்து மாநிலங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருகிறார்கள்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தனியாக நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றார். எனவே எந்த சமரசமும் இன்றி பிரதமரை தேர்ந்தெடுக்க மக்கள் அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com