நவராத்திரி விழா... குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலைகள்

கேரள அரசு அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் சாமி சிலைகளை வரவேற்றனர்.
சாமி சிலை
Published on: 

குமரி,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் மற்றும் திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக கேரளாவுக்கு புறப்பட்டன.

சாமி சிலைகள்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் மன்னர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியத்தின்படி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசாமி மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய உற்சவர் சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அறநிலையத்துறை

இதன் முக்கிய நிகழ்வான திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் ஒப்படைப்பு நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடைபெற்றது. அரண்மனை அலுவலர் கே.பி. சாது, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே. முரளீதரனிடம் உடைவாளை ஒப்படைத்தார். பின்னர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊர்வலம் தொடங்கியது.

அரண்மனை வளாகத்தில் தமிழக மற்றும் கேரள மாநில ஆயுதப்படை போலீசார் இணைந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது எழுந்தருளிய நிலையில், வேளிமலை குமாரசாமி மற்றும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய உற்சவர் சிலைகள் பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை அடைந்த இந்த ஊர்வலம், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரள எல்லைக்குள் நுழைந்தது. அங்கு கேரள அரசு அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் சாமி சிலைகளை வரவேற்றனர். இந்த சாமி சிலைகள் நாளை மாலை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை சென்றடையும். நவராத்திரி விழாவின் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளில் எழுந்தருளிய பிறகு, வருகிற 23-ந்தேதி மீண்டும் பாரம்பரிய முறைப்படி தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com