நெல்லை அரசு மருத்துவமனை கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

போலீஸ் பிடியில் இருக்கும்போதே இந்த மரணம் நிகழ்ந்திருப்பது, பொதுமக்களிடையே கடுமையான சந்தேகங்களையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

நெல்லை அரசு மருத்துவமனை கைதி உயிரிழப்புக்கு தவெக அரசே காரணம் என தமிழக பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் இருந்த கைதியின் உயிரிழப்புக்கு ஜோசப் விஜய் அரசே பொறுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கைதி, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தபோதே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. முழுமையான போலீஸ் பிடியில் இருக்கும்போதே இந்த மரணம் நிகழ்ந்திருப்பது, பொதுமக்களிடையேயும் உயிரிழந்தவரின் உறவினர்களிடையேயும் கடுமையான சந்தேகங்களையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு நபர் முழுமையான போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்போது, அவர் கழிப்பறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார் என்ற காவல்துறையின் கூற்று பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. காவல்துறையின் 24 மணி நேரப் பாதுகாப்பில் இருந்த ஒருவரைக் கண்காணிக்கத் தவறியது ஏன்? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் கடுமையான மெத்தனப் போக்கா அல்லது இந்த மர்ம மரணத்திற்குப் பின் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கேள்விகள் எழுகின்றன.

முதல் - அமைச்சர் விஜய் ஆட்சியில் காவல்துறையின் பிடியில் இருக்கும் நபர்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. எனவே, சங்கரலிங்கத்தின் மரணம் குறித்து முறையான மற்றும் வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான துறைசார் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கத் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com