சட்டம் - ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தவெக அரசு என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

சட்டம் ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

பிரியாணிக் கடையில் கத்திக்குத்து... அடையாறில் பட்டப்பகல் படுகொலை! சட்டம்-ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய விஜய்யின் தவெக அரசுக்குக் கண்டனம்!

ராயப்பேட்டை பிரியாணிக் கடையில் சாப்பிட்டுப் பணம் தராமல் ஊழியர்களைக் கத்தியால் வெட்டிச் சூறையாடியதும், அடையாறில் பட்டப்பகலில் இளைஞரைக் கொன்றுவிட்டு இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ போட்டுக் குற்றவாளிகள் கொண்டாடியதும் தலைநகர் சென்னையை அதிர வைத்துள்ளது. பட்டப்பகலில் உணவகங்களைச் சூறையாடி மனிதர்களை வெட்டிச் சாய்க்கும் அளவுக்குச் சமூக விரோதிகளுக்குத் துணிச்சல் வந்திருப்பது, தவெக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கின் படுதோல்வியையே காட்டுகிறது.

'புதிய அரசியல்', 'நிர்வாக மாற்றம்' என்று மேடைகளில் சினிமா பாணி கவர்ச்சி வசனங்களைப் பேசி ஆட்சிக்கு வந்த முதல் - அமைச்சர் தவெக விஜய் உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் லட்சணம் இதுதானா? நிஜ உலகைச் சினிமா படப்பிடிப்பு போலக் கையாண்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது.

களத்தில் கதறும் தாய்மார்களின் கண்ணீரும், அச்சத்தோடு கடையைத் திறந்து வியாபாரம் செய்ய வேண்டிய வணிகர்களின் பாதுகாப்பற்ற நிலையும் தலைநகரையே உலுக்கியுள்ளது. எனவே வெறும் அலங்கார அரசியலில் மட்டுமே திளைத்துக் கொண்டிருக்கும் முதல் - அமைச்சர் விஜய், நிஜ வாழ்க்கையின் கொடூரங்களை உணர்ந்து, ரவுடிகளுக்குச் சிம்மசொப்பனமாகச் செயல்படக் காவல்துறையை முடுக்கிவிட்டுப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற இந்த அவல நிலைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com