ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் தவெக அரசு - நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

தவெகவினரின் செயல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
Published on: 

திருப்பூர்,

ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை தவெக அரசு நெரிப்பதாக நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் ஆனந்தின் காலில் கட்சி நிர்வாகிகள் விழுந்த காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளரை மிரட்டி, செல்போனைப் பறித்து வீடியோக்களை வலுக்கட்டாயமாக அழித்த தவெகவினரின் அராஜகச் செயல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இதனைப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதிகார மமதை

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் அளவிற்குத் தவெக-வினருக்கு அதிகார மமதை தலைக்கேறியுள்ளதும்; காவல்துறையினர் கண்முன்னே இந்த அத்துமீறல் நடந்தபோதும், அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்திருப்பதும் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு அப்பட்டமான சான்றாகும்.

"புதிய அரசியல்", "ஜனநாயகம்" என்று பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய், தனது கட்சியினரின் இத்தகைய பாசிச அணுகுமுறையைக் கண்டும் காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, செய்தியாளரை மிரட்டி அத்துமீறிய நபர்கள் மீது பாரபட்சமின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, அதனை வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் அச்சமின்றிப் பணியாற்ற முதல்வர் ஜோசப் விஜய் உரிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com