

சென்னை,
மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை அதாவது 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடைபெற இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும்.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
நீட் தேர்வுக்கு வரும் தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்கு உள்ளே அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் தேர்வை நடத்தக் கூடிய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி
* தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்லலாம். ஆனால் அவை வெளிப்படைத் தன்மையாக அதாவது ஒளிபுகும் தன்மையுடன் (டிரான்ஸ்பரன்ட்) இருக்க வேண்டும்.
* தேர்வர்கள் மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்களையோ, பொருட்களையோ அணிந்து வரலாம். ஆனால், முறையான சோதனைக்கு ஒத்துழைக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வந்துவிடவேண்டும்.
* சாதாரண ஆடைகளை அணிவதே சரியானது என்றாலும், தேர்வர்கள் தங்களுக்கு தேவை என்று உணர்ந்தால், முழுக்கை ஆடைகளையோ அல்லது கம்பளியிலான ஆடைகளையோ அணிய அனுமதிக்கப்படுவார்கள். அவற்றை சோதனையிடுவதற்கும் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வரவேண்டும்.
* காலணிகளை பொறுத்தவரையில், சாதாரண செருப்புகள், குறைந்த உயரம் (லோ ஹீல்ஸ்) கொண்ட காலணிகளை அணியலாம்.
* கனமான அணிகலன்களை அணிவதை தவிர்க்கவேண்டும்.
* உயரமான காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
* காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு மேல் யார் வந்தாலும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தலாம். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் அதற்குரிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
* தேர்வின்போது கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* தேர்வு முடிந்த பிறகு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைத்த பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு அறிவுரைகளை தேசிய தேர்வு முகமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்வு மையம் இருக்கும் இடத்தை முன்கூட்டியே வந்தடையும் வகையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறது.